இதனால் தமிழ் திரையுலகின் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தியுடன் 'கைதி' படத்தில் இணைந்தார். ஒரே இரவில் நடக்கும் கதை, அப்பா-மகள் சென்டிமெண்ட், ஹீரோயின், பாடல்கள் இல்லாத படம் போன்ற எக்கச்சக்க ஹைலைட்ஸ்களுடன், தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.


இதனிடையே, லோகேஷ் கனகராஜின் திறமையை அறிந்த தளபதி விஜய், தனது 64-வது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அளித்தார். இதனையடுத்து, விஜய்யுடன் கூட்டணி சேர்ந்த லோகேஷ் கனகராஜ், தற்போது 'தளபதி-64'  படத்தை இயக்கி வருகிறார். 

அவரது முதல் இரு படங்களைப் போன்றே, இந்தப் படமும் மிகவும் வித்யாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இதுவரை பார்க்காத விஜய்யை இந்தப் படத்தில் பார்க்கலாம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

'தளபதி-64' படத்தின் ஷுட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த தகவலும் கசியத் தொடங்கியுள்ளது. 


அதுஎன்னவென்றால், கார்த்தி, விஜய்யை அடுத்து, உலக நாயகன் கமல்ஹாசனுடன் அவர் கைகோர்க்க உள்ளாராம். 

'தளபதி-64' படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தை இயக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கமலிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவரிடம் லோகேஷ் ஒரு கதையை சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்தப் படத்தை, கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது. இப்படி, அடுத்தடுத்து முன்னணி நாயகர்களுடன் லோகேஷ் கனகராஜ் இணைவதாகக் கூறப்படுவது, கோலிவுட்டையே ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது. முன்னதாக, 'கைதி' படம் உருவாக கமல்ஹாசனின் 'விருமாண்டி' திரைப்படமும் ஒரு காரணம் என லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.