லோகேஷ் எல்.சி.யூவை உருவாக்கியது போல், இயக்குனர் வெற்றிமாறன் வட சென்னை யூனிவர்ஸை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vetrimaaran Create Vada chennai Universe : ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் சினிமேட்டிக் யூனிவர்ஸ் கான்செப்டை தமிழ் சினிமாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது லோகேஷ் கனகராஜ் தான். அவர் இயக்கிய விக்ரம் படம் மூலம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் பிரபலமானது. இப்படத்தை தொடர்ந்து லியோ படத்தையும் எல்சியூ-வுக்குள் கொண்டு வந்தார் லோகி. தற்போது வரை இந்த யூனிவர்ஸில் விஜய், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி ஆகியோர் உள்ளனர். இதுதவிர இந்த எல்சியூவை மையமாக வைத்து அவர் தயாரிக்கும் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடித்து வருகிறார்கள். இதனால் லோகேஷின் எல்சியூ பெரிதாகிக் கொண்டே செல்கிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2 மற்றும் ரோலெக்ஸ் ஆகிய படங்களும் இந்த யூனிவர்ஸுக்குள் தான் வர உள்ளது.

வெற்றிமாறன் சினிமேட்டிக் யூனிவர்ஸ்

இந்த எல்சியூவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது வெற்றிமாறனின் விசியூ களமிறங்கி உள்ளது. அவர் தனது வட சென்னை படத்தை ஒரு யூனிவர்ஸ் ஆக உருவாக்க திட்டமிட்டு உள்ளாராம். வட சென்னை படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெறும் அமீரின் ராஜன் கேங்கை மையமாக வைத்து ராஜன் வகையறா என்கிற கதையை உருவாக்கி உள்ளதாக பல பேட்டிகளில் கூறி இருந்த வெற்றிமாறன். தற்போது அதை ஒரு படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.

வட சென்னை யூனிவர்ஸுக்குள் வந்த சிம்பு

இந்த ராஜன் வகையறா கதையின் மூலம் வட சென்னை யூனிவர்ஸுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நடிகர் சிம்பு தான் வட சென்னை படத்தில் நடிப்பதாக இருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு சிம்புவை வைத்து வட சென்னை படத்தை உருவாக்க இருந்தார் வெற்றிமாறன். அதில் ராணா டகுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து சிம்பு, ராணா இருவருமே விலகிவிட்டனர். இதையடுத்து தனுஷை வைத்து வட சென்னை படத்தை எடுத்து வெற்றிகண்டார் வெற்றிமாறன்.

வட சென்னை திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆனாலும் அதன் மீதான கிரேஸ் இன்னும் குறையவில்லை. அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என பல வருடங்களுக்கு முன்பே அறிவித்தாலும் அது இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லை. அண்மையில் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது கூட, அடுத்த ஆண்டு வட சென்னை 2 வரும் என கூறி இருந்தார் தனுஷ். இதனால் ரசிகர்கள் அப்படத்திற்காக அவலோடு எதிர்பார்த்திருந்த சமயத்தில் திடீர் ட்விஸ்டாக சிம்பு உடன் கூட்டணி அமைத்தார் வெற்றிமாறன்.

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி

ராஜன் வகையறா கதையின் மூலம் வட சென்னை யூனிவர்ஸுக்குள் தற்போது சிம்புவும் வந்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் இதன் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சிம்பு உடன் இயக்குனர் நெல்சனும் கலந்துகொண்டார். அதன்மூலம் அவரும் இப்படத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் நடிகர் கவினும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்க உள்ளது.

வட சென்னை 2-வில் சிம்பு, தனுஷ்?

இந்த படம் மூலம் சிம்பு வட சென்னை யூனிவர்ஸுக்குள் வந்துள்ளதால், அடுத்ததாக வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள வட சென்னை 2 படத்திலும் சிம்பு நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் நடந்தால், நடிகர் சிம்புவும், தனுஷும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும். சிம்புவும் வட சென்னை யூனிவர்ஸுக்குள் வந்துள்ளதால், வட சென்னை 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வாடிவாசலை கைவிட்ட வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல் படத்தை கைவிட்டுவிட்டு தான் சிம்பு படத்தை இயக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. வாடிவாசல் படத்திற்கான முழு ஸ்கிரிப்டையும் சூர்யா கேட்டதாகவும், அது ரெடியாக இல்லாததால், விடுதலை 2 படம் மூலம் வாடிவாசலும் இழுத்தடிக்கும் என்கிற அச்சத்தில் அப்படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அப்படத்தையும் கலைப்புலி தாணு தான் தயாரிப்பதாக இருந்தார். அப்படம் டிராப் ஆனதால் தான் தற்போது சிம்பு படத்தை அவர் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கம்பேக் கொடுப்பாரா சிம்பு?

நடிகர் சிம்புவும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனெனில் அவர் சோலோ ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த பத்து தல படம் தோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தை மலைபோல் நம்பி இருந்தார் சிம்பு, அப்படமும் இந்த மாதம் திரைக்கு வந்து அட்டர் பிளாப் ஆனது. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிம்பு. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் சிம்புவுக்கு தரமான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.