தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை, 1200க்கு குறையாமல் உள்ளது. அதே நேரத்தில், கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் வரதராஜன், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு சென்றபோது, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில், ஒரு பெட் கூட அவருக்கு கிடைக்க வில்லை என்றும், கொரோனா அறிகுறியோடு சென்றால் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சற்று முன் சந்தித்து பேசினார். அப்போது உண்மைக்கு புறம்பாக, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றும், மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க மறுப்பதாகவும் வதந்திகளை பரப்பிய நடிகர் வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.