ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து 7 நாட்கள் மாணவர்களுடன் இருந்து போராடியவர்களில் முக்கியமானவர் நடிகர் லாரன்ஸ்.
போராட்டத்தின் போது போராடகர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள், பெட்ஷீட், மொபைல் டாய்லெட் ஆகியவற்றை தனது செலவில் கொடுத்து போராட்டம் வெற்றிகரமாக முடிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறவழி போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியபோது மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு இப்போது தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்து போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய கோரியும், போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அனுமதிக்க கோரியும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டதை அடுத்து சற்றுமுன் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும், தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத்தயார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமே தேர்தலில் நிற்பார்கள் என்றும் அவர் கூறினார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான வெற்றி விழாவை விரைவில் கொண்டாடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்
