'காஞ்சனா’ இந்தி ரீமேக்கிலிருந்து ரோஷப்பட்டு வெளியேறிய இயக்குநர் ராகவா லாரன்ஸ் மீண்டும் அப்படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு கைகூடி வருவதாக தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்’ துவங்கி ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்திருந்த நிலையில் ’மனிதர்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட தன் மானம் தான் முக்கியம்’ என்று அறிவித்தபடி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மும்பையிலிருந்து சென்னைக்கு ரிட்டர்ன் டிக்கட் எடுத்து திரும்பி விட்டார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.

அக்‌ஷய் குமார், அத்வானி கியாரா, அமிதாப் நடிக்க லாரன்ஸ் இயக்கத்தில் துவங்கப்பட்ட காஞ்சனாவின் ரீமேக் ‘லக்‌ஷ்மி பாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதை வெளியிடும் தகவலை இயக்குநர் லாரன்ஸுக்கு ஹீரோ அக்‌ஷய் குமாரும் தயாரிப்பாளர் தரப்பும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அதை ஒரு இயக்குநருக்கு நடந்த ஆகப் பெரிய அவமானமாகக் கருதிய லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,...’நண்பர்களே மதியாதார் வாசல் மிதியாதே’ என்பது தமிழனின் பழமொழி. ‘லக்‌ஷ்மி பாம்’ படப்பிடிப்பில் எனக்கு அது நடந்துவிட்டது.எனவே தன்மானமே முக்கியம் என்று கருதி இப்படத்தை விட்டு வெளியேறுகிறேன்.

நான் நினைத்தால் கதையை கொடுக்க முடியாது என கூறலாம், ஆனால் அப்படி செய்யப்போவதில்லை. அக்க்ஷய் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. அவரை சந்தித்து ஸ்கிரிப்டை ஒப்படைத்துவிட்டு முறையாக விலகுகிறேன். அவர்கள் வேறொரு இயக்குநரை ஒப்பந்தம் செய்துகொண்டு இப்படத்தைத் தொடரலாம். படம் பெரும் வெற்றி பெற குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பொங்கி படத்தை விட்டு வாக் அவுட் செய்திருந்தார்.

சுமார் ஒருவார மயான அமைதிக்குப்பின் இன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பு வெளியிட்டுள்ள லாரன்ஸ்,’’எனது காஞ்சனா ரிமேக் கைநழுவிப் போனது பயங்கர அப்செட்டில் இருந்தேன். இந்நிலையில் நாளை மும்பையிலிருந்து என்னைச் சந்திக்க தயாரிப்பாளர்கள் சென்னை வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சரியாக நடந்துகொண்டால் நானே படத்தை இயக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.