கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அவரே எழுதி, இசையமைத்து நீண்ட வருடங்களுக்கு பின் பாடியுள்ள பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த், ஒரு சிறந்த மனைவி, இரு பெண் பிள்ளைகளின் தாய், பேர குழந்தைகளே தன் உலகம் என வாழும் பாட்டி, சில நிறுவங்களை திறமையோடு நடத்திவரும் நிறுவனர் என அனைத்தையும் திறம்பட செய்து வருகிறார். அதே போல் அவர் ஒரு சிறந்த பாடகி என்பதும், அவர் ஒரு சில திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்.

உலக நாயாகன் கமலஹாசன் நடித்த ’டிக் டிக் டிக்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’நேற்று இந்த நேரம்’ என்ற பாடல், ’அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் இடம்பெற்ற ’கடவுள் உள்ளமே’ என்ற பாடல், மற்றும் வள்ளி, கோச்சடையான் படங்களிலும் அவர் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் எழுதி இசையமைத்து பாடிய ஒரு பாடல் நேற்று வெளியாகியுள்ளது. "அன்பு ஒன்றுதான் உலகில் சிறந்தது’ என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் லதா ரஜினிகாந்த் குழந்தைகளை எப்படி உன்னதமான அன்புடன் பார்க்கிறார் என்பது குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இந்த பாடலில் ’மதுவுக்கு அடிமையாக கிடக்கும் மனிதர்கள் மனதை அழிப்பான் தன்னை மறப்பான்’ என்கிற பாடல் வரியை கேட்டு பலர் இவரை மனதார பாராட்டி வருகிறார்கள்.

இவரின் இந்த பாடலுக்கு, தனுஷ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.