கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷின் பல கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதோடு, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டலும்  விடுப்பதாக, அவரது மனைவி திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 ரித்தீஷின் மறைவுக்கு பிறகு அவரது நண்பர்கள் மூலம் பலவிதத்தில் மிரட்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியிருக்கும் ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி, ரித்தீஷின் நண்பரும், ’தப்பாட்டம்’ என்ற படத்தை தயாரித்தவருமான ஆதம் பாவா, தனக்கு கொலை மிரட்டல் விருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் சுமார் ரூ.25 கோடி மதிப்புடைய பள்ளிக்கூடம் மற்றும் சில வீடுகளை சுப்பிரமணி என்பவரிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் போட்ட ஜே.கே.ரித்திஷ், அதற்காக முன்பணமாக ரூ.4 கோடியை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.ஆனால், சொத்தை வாங்குவதற்கு முன்பாகவே ரித்தீஷ் திடீர் மாரடைப்பால்  மரணமடைந்து விட்டார். இதையடுத்து சுப்பிரமணியிடம் கொடுத்த முன் பணத்தை ஜோதீஸ்வரி திருப்பி கேட்க, அவரும் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் பணம் வந்து சேரவில்லை.

இந்நிலையில்  அந்த ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்களை ரித்தீஷின் நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆதம் பாவா, அபகரிக்க முயல்வதாக ஜோதீஸ்வரி கூறியுள்ளார்.மேலும், ஆதம் பாவா திடீரென்று தனது வீட்டுக்கு வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருக்கும் ஜோதீஸ்வரி, ரித்தீஷின் பல கோடி மதிப்புள்ள வேறுபல சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் ஆதம் பாவா மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.ஜே.கே.ரித்தீஷிடம் கார் டிரைவராக பணியாற்றிய ஒருவர், ஜோதீஸ்வரி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.