தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இந்திய சினிமாவின் நைட்டிங்கேல் எனப் புகழப்படும் லதா மங்கேஷ்கர் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக மும்பை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 90.

1929ம் ஆண்டு மத்திய பிரதேசம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். தனது ஆறாவது வயதில் பாடத்துவங்கிய அவர் இந்தியில் மட்டும் ஆயிரம் படங்களுக்கும் மேல் பாடியிருக்கிறார். தமிழ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் 3 முறை தேசிய விருதுகள் பெற்றவர். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள்,  6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என இப்படி பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர்.

தமிழில் இளையராஜா இசையில் ‘ஆனந்த்’படத்தில் ‘ஆராரோ ஆராரோ’, ‘என் ஜீவன் அழைக்குது’படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும்’போன்ற இனிய பாடல்களைப் பாடியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை என்று தன்னைப் பெருமையாக அழைத்துக்கொள்பவர்.

இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக  மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் பரோக் இ உத்வாடியா கண்காணிப்பில் லதா மங்கேஷ்கர் சிகிச்சையில்  உள்ளார். அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.