தமிழ் சினிமாவில், ஓரிரு படங்களில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவரும் நடிகைகள், கடைசி வரை மார்க்கெட் குறையாமல் இருக்கிறார்களா எனறால் அது சந்தேகமே. எவ்வளவு சீக்கிரம் புகழ் அவர்களை தேடி வருகிறதோ... அதே வேகத்தில் திரும்பியும் சென்று விடுகிறது.

அந்தவகையில், சுந்தர பாண்டியன், கும்கி, போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை லட்சுமி மேனன் நடிப்பில் கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு 'றெக்க' படம் வெளியானது. இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த 'யங் மங் சங்' படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

பின் படவாய்ப்புகள் சரிவர அமையாததால், மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சை காட்டினார் லட்சுமி மேனன். அதே போல், தான் நடிகை ஸ்ரீதிவ்யாவும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் வெற்றிபெற்ற போதிலும், இவரால் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

கடைசியாக நடிகர் ஜீவா ஜோடியாக 'சங்கிலி புங்கிலி காதவதொர' படம் தான் இவர் நடிப்பில் வெளியானது. சரியான படவாய்ப்புக்காக காத்திருந்த இவர்கள் இருவரையும், ஒரே படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் சுசீந்திரன் முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறந்த கம் பேக்குக்காக காத்திருந்த இருவருமே, இந்த படத்திற்காக தங்களுடைய உடல் எடையை குறைத்து, ரசிகர்களை ஈர்க்க வேற லெவலில் தயாராகி வருகிறார்களாம். மேலும் விக்ரம் பிரபு ஏற்கனவே 'கும்கி' படத்தில் லட்சுமி மேனனுடனும், 'வெள்ளக்கார துறை' படத்தில் ஸ்ரீதிவ்யாவுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.