யுடுபில் அதிரிபுதிரி ஹிட்டடித்த தனுஷ்-சாய் பல்லவி பாடலுக்கு வாழ்த்துத் தெரிவித்த நடிகை குத்து ரம்யாவை, ‘நீ ஒழுங்கா தமிழ்நாட்டுக்கே ஓடிப்போயிடு’ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய்பல்லவி நடித்து வெளியான ‘மாரி-2’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரௌடி பேபி...’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை தனுஷ் எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்; கடந்த 2ம் தேதி யூ-டியூபில் பதியப்பட்ட இந்தப் பாடல், 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் மூலம், அதிகம் மக்கள் பார்த்த தமிழ் பாடல் என்ற சாதனையை ‘ரௌடி பேபி...’ பெற்றுள்ளது.

இந்நிலையில், முன்னாள் நடிகை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தப் பாடலின் வெற்றிக்காக மகிழ்வதாக குறிப்பிட்ட அவர் பாடலில் இடம்பெற்ற இரண்டு ரவுடிகளுக்கும் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார். இவர், தனுஷுடன் ‘பொல்லாதவன்’சிம்புவுடன் ‘குத்து’ உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆவார்.

 ’மாரி-2’ ரிலீஸான அதே நாளில் ’கேஜிஎஃப்’ என்ற கன்னட மொழிப் படமும் ரிலீஸானது. ’கேஜிஎஃப்’ படத்தை பற்றிப் பேசாமல், தமிழ் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறியதால், கர்நாடக மாநில மக்கள் சிலர் ரம்யாவுக்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ’கே.ஜி.எஃப்’ படம் முதன்முதலாக பாகிஸ்தானில் ரிலீஸான படம் என்ற பெருமையைப்பெற்றிருக்கும் நிலையில், தமிழ்ப்படத்தின் பெருமையைப் பேசுகிறாராயா, நீ ஒழுங்கு மரியாதையா தமிழ்நாட்டுக்கே ஓடிப்போயிடு’ என்கிற ரீதியில் ரம்யாவை நோக்கி கமெண்டுகள் குவிகின்றன.

குத்து ரம்யாவை தமிழகம் கெத்தோடு வரவேற்கக் காத்திருக்கிறது.