’ஒரு காலத்தில் மக்களால் ஓஹோவென்று கொண்டாடப்பட்ட படங்களை ரீமேக் செய்ய முயற்சிக்கக் கூடாது. நானும் பிரபுவும் இணைந்து நடித்த ‘சின்னத் தம்பி’படத்தைக் கூட ரீமேக் செய்ய சிலர் விரும்புகிறார்கள். அவ்வாறு செய்தால் அது சரிப்பட்டு வராது’ என்று நடிகை குஷ்பூ கூறுகிறார்.

பிரபு, குஷ்பு நடிப்பில் 1991ம் வெளியாகி  மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சின்னதம்பி’.சின்னச்சின்ன செண்டர்களில் கூட வசூலை வாரிக்குவித்த படம்.  இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஒரு பேச்சு எழுந்தது. இதுபற்றி குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, ‘ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்கக் கூடாது. வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகையான  நான்  தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து தமிழக மக்கள் பார்த்தனர். 

அந்த அளவுக்கு டைரக்டர் வாசு சார் சின்னத்தம்பியில் எனது  நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான வி‌ஷயம் வேறு எந்த ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் எனக்காக  அந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். டாப் ஹீரோவாக அந்த சமயத்தில் பிரபு சார் பெருந்தன்மையுடன் ஹீரோயிசமே இல்லாமல் நடித்தார்.

இப்போது ரீமேக் என்று வரும்போது படத்திலிருந்த பல மேஜிக்குகள் மிஸ் ஆகலாம். நான் நடித்த நந்தினி கேரக்டரை எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்...?’என்று கேள்வி எழுப்புகிறார் குஷ்பு.