தமிழ் சினிமாவில் 1989 ஆண்டிலிருந்து நடித்து வரும் ராஜ்கிரண், இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது, முதல்முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார்.  மலையாளத்தில் அவர் அறிமுகமாகும் அந்த படம் 'ஷைலாக்'. மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில், ஒரு வலுவான முக்கிய கேரக்டரில் ராஜ்கிரண் நடிக்கிறார்.

 'ஷைலாக்' படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். 1991-ல் வெளியான 'என் ராசாவின் மனசிலே' படத்திற்குப் பிறகு, ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். அஜய் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகும் 'ஷைலாக்' படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

 'ராஜாதி ராஜா', 'மாஸ்டர் பீஸ்' படங்களைத் தொடர்ந்து அஜய் - மம்முட்டி கூட்டணியில் உருவாகும் 3-வது படம் இது. மலையாளம், தமிழ் என இரு  மொழிகளில் தயாராகும் இந்தப்படம், தமிழில் 'குபேரன்' என்ற பெயரில் வெளிவருகிறது. 

இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனம், 'ராசாவே உன்னை நம்பி', 'என்ன பெத்த ராசா', 'என் ராசாவின் மாசிலே', 'அரண் மனைக்கிளி', 'எல்லாமே என் ராசாதான்' ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. 

பல வருடங்களாக தயாரிப்பு மற்றும் விநியோகத் துறையில் ஈடுபடாமல் இருந்த ராஜ்கிரண், தற்போது, 'குபேரன்' படத்தை தமிழில் வெளியிடுவதன் மூலம் மீண்டும் விநியோகஸ்தர் அவதாரத்தை எடுத்துள்ளார். 


மலையாளத்தில் மம்முட்டியுடன் ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் முதல் படம் - மலையாளத்தில் அறிமுகமாகும் முதல் படம் - 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாவுடன் ஜோடி சேரும் படம் என எக்கச்சக்க ஹைலைட்டுகளுடன் உருவாகும் 'குபேரன்' படத்தை  டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.