ஒரே நாளில் போட்டி போட்டு ரிலீஸ் ஆன சிதாரே ஜமீன் பர் மற்றும் குபேரா ஆகிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை பார்க்கலாம்.

Sitaare Zameen Par vs Kuberaa Box Office : ஜூன் 20ந் தேதி நடிகர் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதனுடம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆன மற்றுமொரு படம் சிதாரே ஜமீன் பர். இப்படத்தில் அமீர்கான் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி இருந்தார். இப்படத்தில் அமீர்கான் ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்திருந்தார். தனுஷின் குபேரா படத்தை போல் அமீர்கானின் சிதாரே ஜமீன் பர் படமும் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. அமீர்கானுக்கு உதவியாக ஷாருக்கானும் இப்படத்தை புரமோட் செய்திருந்தார். இதனால் இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

அமீர்கானின் சிதாரே ஜமீன் பர்

நடிகர் அமீர் கான் கடைசியாக நடித்த லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அமீர்கான், தேர்வு செய்து நடித்த படம் தான் சிதாரே ஜமீன் பர். இப்படத்தில் கூடைப்பந்து பயிற்சியாளராக நடித்திருந்தார் அமீர்கான். அவர் ஒரு வழக்கில் சிக்கிக் கொள்ள, அவரை மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு கூடைப்பந்து பயிற்சியளிக்க நீதிபதி உத்தரவிடுகிறார். இதையடுத்து அமீர்கான் என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை. உணர்வுப்பூர்வமான திரைப்படத்தில் ஆங்காங்கே நம்மை மகிழ்விக்கும் வகையில் காமெடி காட்சிகளும் உள்ளன.

அமீர்கானுக்கு கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இருப்பினும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சிதாரே ஜமீன் பர் திரைப்படம் பெரியளவில் சோபிக்கவில்லை. அதன்படி இப்படம் முதல்நாளில் இந்தியாவில் வெறும் ரூ.11.7 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். நடிகர் அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா படமும் முதல் நாளில் இந்த அளவுக்கு தான் வசூலித்து இருந்தது. ஆனால் அப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றதால் அப்படம் மொத்தமே ரூ.60 கோடி தான் வசூலித்தது.

குபேராவை விட கம்மியாக வசூலித்த சிதாரே ஜமீன் பர்

சிதாரே ஜமீன் பர் படத்தைக் காட்டிலும் அதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன குபேரா திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.13.5 கோடி வசூலித்து உள்ளது. குபேரா படத்திற்கு தமிழ்நாட்டை காட்டிலும் தெலுங்கு மாநிலங்களில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சிதாரே ஜமீன் பர் திரைப்படம் இந்தி பதிப்பின் வாயிலாக மட்டும் ரூ.11.5 கோடி வசூலித்து உள்ளது. ஆனால் இதன் தெலுங்கு பதிப்பு வெறும் 15 லட்சம் தான் வசூலித்து உள்ளது. தமிழ் பதிப்பு அதைவிட மோசம் வெறும் ரூ.5 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாம்.

2018-ல் வெளிவந்த சாம்பியன்ஸ் என்கிற ஸ்பானிஷ் மொழி திரைப்படத்தை தழுவி தான் சிதாரே ஜமீன் பர் திரைப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்தை எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியிடப்போவதில்லை என ரிலீசுக்கு முன்பே அறிவித்த அமீர்கான். இதை நேரடியாக யூடியூப்பில் வெளியிடுவேன் என்றும் கூறி இருந்தார். அதில் காசு கட்டி பார்க்கும் வகையில் இந்த படத்தை வெளியிட உள்ளதாக அமீர்கான் தெரிவித்தார். அவரின் இந்த முயற்சி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.