‘குபேரா’ திரைப்படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
Kuberaa 5th Day Box Office Collection
கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியான ‘குபேரா’ திரைப்படம் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ஒரு பான்-இந்தியா திரைப்படமாகும். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அமிகோஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தன.
குபேரா படத்தின் கதை
‘குபேரா’ திரைப்படம் பணம், பேராசை, தர்மம் போன்ற கருப்பொருட்களை ஆராயும் ஒரு படமாகும். தனுஷ் ஒரு பிச்சைக்காரராக தொடங்கி பணக்காரராக மாறும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் இந்த மாற்றம், அதற்குப் பின்னால் உள்ள மர்மங்கள் ஆகியவை கதையின் சுவாரஸ்யமாகும். நாகார்ஜூனா ஒரு செல்வாக்கு மிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சில ஆன்மீகக் கூறுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. சேகர் கம்முலாவுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். எனவே இந்த படம் அந்த தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தெலுங்கில் வசூலைக் குவிக்கும் குபேரா
ஆனால் தமிழ்நாட்டில் இந்த படம் கலையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. படத்தின் திரைக்கதை மிக மெதுவாக நகர்வதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். இருப்பினும் தனுஷ் பிச்சைக்காரராக நடித்த விதம் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்துள்ளனர். இந்த நிலையில் ‘குபேரா’ திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் 70% வசூல் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த திரைப்படம் குறைந்த வசூலையே பெற்று வருகிறது.
5 நாளில் குபேரா செய்துள்ள வசூல்
முதல் நாளில் ரூ.14.75 கோடி வசூலித்த இந்த திரைப்படம், இரண்டாவது நாளில் ரூ.16.5 கோடி, மூன்றாவது நாளில் ரூ.17.35 கோடி, நான்காவது நாளில் ரூ.6.85 கோடி, ஐந்தாவது நாளில் ரூ.5.31 கோடியை வசூலித்துள்ளது. ஐந்து நாள் முடிவில் மொத்தம் ரூ.60.71 கோடியை ‘குபேரா’ திரைப்படம் வசூலித்துள்ளது. இதில் 70% வசூல் தெலுங்கு மொழியில் இருந்து கிடைத்துள்ளது. தெலுங்கில் முதல் நாள் ரூ.10 கோடியும், இரண்டாவது நாள் ரூ.11.5 கோடியும், மூன்றாவது நாள் ரூ.12.4 கோடியும், நான்காவது நாள் ரூ.4.95 கோடியும், ஐந்தாவது நாள் ரூ.3.77 கோடியும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாள் ரூ.4.5 கோடி, இரண்டாவது நாள் ரூ.4.65 கோடி, மூன்றாவது நாள் ரூ.4.5 கோடி, நான்காவது நாள் ரூ.1.6 கோடி, ஐந்தாவது நாள் ரூ.1.31 கோடியும் வசூல் ஆகியுள்ளது.
ரூ.100 கோடி வசூலிக்குமா?
இந்த வசூல் நிலவரங்கள் புதிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் இணையதளங்களின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டவை. படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து விரைவில் படக்குழுவினர் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக வெளியாகும் படங்கள் அதிக வரவேற்பை பெறுவதில்லை. மேலும் ரூ.100 கோடி வசூல் பெரும் படங்களின் பட்டியலிலும் இணைவதில்லை. எனவே ‘குபேரா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைப் பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருப்பதால் ‘குபேரா’ படத்தின் வசூல் கணிசமாகக் குறையலாம் என கணிக்கப்படுகிறது.
குபேரா ஓடிடி வெளியீடு
இந்த நிலையில் ‘குபேரா’ திரைப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.47 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், ஜூலை 18 ஆம் தேதி இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் குபேரா படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
