பாலிவுட் டூ கோலிவுட் வரை அனைத்து மொழிகளிலும் தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கி இயல்பாக நடைபெற்று வருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் என்ன தான் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பார்த்து, பார்த்து ஷூட்டிங் நடத்தப்பட்டாலும் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது தொடர்கதையாக மாறி வருகிறது. சமீபத்தில் கேரள நடிகர் பிருத்விராஜ், நடிகை தமன்னா, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

நடிகர் சரத்குமார் தற்போது ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஜுக் ஜுக் ஜீயோ இந்தி படத்தில் வருண் தவான், கியாரா அத்வானி, நீத்து கபூர், அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இதில் வருணுக்கும், நீத்து கபூருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கியாரா அத்வானிக்கு எவ்வித கொரோனா அறிகுறிகளும் இல்லை. இதையடுத்து தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது அதேபோல் சண்டிகரில் நடந்து வந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சனோன்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பிரபாஸ் நடிக்க உள்ள ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் கீர்த்திக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.