விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கலக்கப் போவது யாரு என்ற காமெடிநிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ராமர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...’ என ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைக் கலாய்த்து இவர் நடித்ததன் மூலம் ‘என்னம்மா’ ராமர் என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 

காமெடியுடன் பாடவும் செய்யும் திறமை கொண்ட ராமர், அடி ஆத்தாடி என்ன உடம்பு பாடலை அவர் ஸ்டைலில் பாடி இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அவர் மாதியே பாடவைத்து ஆட்டம்போட வைத்தார். 

ரசிகர்கள் மத்தியில் ராமருக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்த தமிழ் திரையுலகினர், அவரை அப்படியே கோலிவுட்டுக்கு தூக்கி வந்துவிட்டனர். 'கோமாளி', 'சிக்ஸர்' உள்ளிட்ட படங்களில் தனது காமெடியால் கலக்கிய ராமர், புதிய படத்தில் ஹீரோவாக ப்ரமோஷன் ஆகியுள்ளார். 

அவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடித்து வருகிறார். இவர் வேறுயாருமல்ல, நடிகை நிக்கி கல்ராணியின் அக்காதான்.


கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் 'தமிழ் இனி' குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த மணி ராம், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு. விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்திற்கு 'போடா முண்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

அத்துடன், டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். யாரும் எதிர்பாராத இந்த டைட்டில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
'போடா முண்டம்' என்ற தலைப்பை பார்த்து, ராமர் ஸ்டைலிலேயே என்னம்மா இப்படியெல்லாமா டைட்டில் வைப்பீங்க! என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

ஒரு சிலரோ, இனி யாரை வசைப்பாட வேண்டுமென்றாலும் 'போடா முண்டம்' படத்தின் டைட்டிலை சொல்லி வசைபாடலாம் என திட்டம் தீட்டி வருகின்றனர்.