கமல்ஹாசன் கூறிய வரலாற்று உண்மையை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது மொழியின் வரலாற்றை அறியாமை என கொங்கு மக்கள் முன்னணி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
Kongu Makkal Munnani Supports Kamalhaasan : நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது தமிழில் இருந்து உருவானது தான் கன்னடம் என கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அங்குள்ள கன்னட அமைப்புகள் கமலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமின்றி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை தக் லைஃப் திரைப்படத்தை அங்கு வெளியிட மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தது.
பதிலுக்கு நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதையடுத்து தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட கமல் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் நீதிமன்றம் கமலை சரமாரியாக விமர்சித்து இருந்தது. இதனால் தக் லைஃப் திரைப்படத்தின் கன்னட ரிலீஸை தள்ளிவைப்பதாக அறிவித்தார் கமல்ஹாசன். இந்த நிலையில், கன்னட படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொங்கு மக்கள் முன்னணி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கன்னட படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம்
அதில், “தமிழ் திரைப்பட நடிகர்களில் மூத்த நடிகரான கமல்ஹாசன் அவர்கள் நடிப்பிலும், தயாரிப்பிலும் வெளியாக உள்ள தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு முறை தமிழ் திரைத்துறையினருக்கு எதிராக கன்னட அமைப்பினர் வன்மத்தோடு செயல்பட்டு வருகின்றனர். அதே போல தற்போது தமிழில் இருந்து பிரிந்த மொழி கன்னடம் என்று கமல்ஹாசன் அவர்கள் கூறிய வரலாற்று உண்மையை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது மொழியின் வரலாற்றை அறியாமையாகும்.
ஆனால் அதே சமயம் அவர்களின் எதிர்ப்புக்கு பதிலடியாக தமிழகத்தில் கன்னட திரைப்பட முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை தமிழக திரையரங்கில் திரையிட அனுமதிக்க மாட்டோம் அதையும் மீறி தமிழர்களை அவமதிக்கும் கன்னட வெறியர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரையிடும் திரையரங்குகளில் கொங்கு மக்கள் முன்னணி சார்பில் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்" என குறிப்பிட்டுள்ளார்.
