Ayalaan Audio Launch : மிகப்பெரிய பொருட்செலவில், உயர் தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் அயலான். அண்மையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "இன்று நேற்று நாளை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஆர். ரவிக்குமார். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்த படம் வெளியான அடுத்த ஆண்டே அயலான் திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தை துவங்கியது.
அப்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருந்த சிவகார்த்திகேயன், இந்த திரைப்படம் சில உயர் தொழில்நுட்பங்கள் கொண்டு பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதால் இந்த திரைப்படம் உருவாக சில ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறினார். இந்நிலையில் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்டி ராஜா இந்த திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தார்.
அன்று தொடங்கி தற்போது வரை இந்த திரைப்படம் வெகு சிறப்பாக உருவாகி வந்துள்ளது என்றே கூறலாம். இதற்கிடையில் வேலைக்காரன் மற்றும் சீமா ராஜா என்று பல திரைப்பட பணிகளை முடித்து, அயலான் திரைப்பட பணிகளை துவங்கிய சிவகார்த்திகேயன், சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக அப்பாடப் பணிகளை முடித்தார்.
இந்நிலையில் வருகின்ற 2024ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் ஒரு இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல இப்படத்தில் இருந்து ஏற்கனவே முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில், இரண்டாம் சிங்கள பாடல் அதிவிரைவில் வெளியாகும் என்றும் பட குழு அறிவித்துள்ளது.
