கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் வெற்றியை அள்ளியது. 

கன்னட சினிமாவில் முதல் 100 கோடி வசூல் என்று அசத்திய இந்த திரைப்படத்தால், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் யாஷ் சூப்பர் ஹீரோவாக தெரிய ஆரம்பித்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படம் அதே பிரம்மாண்டத்துடன் தயாராகி வந்தது. இடையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

தற்போது, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் யாஷ் - சஞ்சய் தத் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியைப் படமாக்கி வருகிறார்கள். 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது. டீஸர் எப்போது வெளியீடு என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இதனிடையே 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அதில், "ஒருவழியாக அந்த நாள் வந்துவிட்டது. 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று உங்கள் அனைவரிடமும் எங்களால் சொல்ல முடிகிற நாள்.எங்கள் அற்புதமான ரசிகர்களுக்காக ஒரு சடங்கு போல டிசம்பர் 21 அன்று வழக்கமாக நாங்கள் பின்பற்றும் ஒரு விஷயம். இந்த வருடமும் அது நடக்கும். 21 டிசம்பர் காலை 10.08 மணிக்கு உங்கள் அனைவருக்கும் எங்கள் அணியிலிருந்து ஒரு விருந்து. எங்கள் அத்தனை அதிகாரபூர்வ பக்கங்களிலும். எப்போதும்போலப் பொறுமையாக இருந்ததற்கும் எங்களது இந்தப் பயணத்தில் எங்களுக்கு உறுதியான ஆதரவு தந்ததற்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளனர்.