ஒரு பக்கம் மிக நீண்ட மகளிர் சுவர், இன்னொரு பக்கம் சபரிமலைக்குச் செல்ல முயலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக கடும் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக்கொண்டது  என்று கேரள மாநிலபோலீஸ் அதிக டென்சனை சந்தித்த அதே புத்தாண்டு தினத்தன்றுதான் இந்தியாவில் ஃபேஸ்புக் பயணாளிகளால் அதிகம் ‘லைக்’கப்படும் போலீஸ் என்ற பெருமையையும் தட்டிச்சென்றது.

யெஸ்...நேற்றைய நிலவரம் வரை பத்து லட்சத்து ஏழாயிரம் பேரின் லைக்ஸூடன் இந்திய காவல்துறையின் அத்தனை மாநில சாதனைகளையும் கடந்து முதலிடத்துக்கு வந்திருக்கிறது கேரளபோலீஸ். இத்தகவலை கேரள காவல்துறை அதிகாரிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருடன் சென்று நாளைதான் முதல்வர் பிரனாயி விஜயனுக்குத் தெரிவிக்க இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஒரு காவல்துறை அதிகார் கூறுகையில்,’ இது ஒன்றும் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படவில்லை. சுமார் எட்டு மாதங்கள் வரை நாங்களும் ஒரு ஸ்டேட்டஸ்க்கு 50 லைக்குகளும் 100 லைக்குகளுமாக மொக்கை வாங்கிக்கொண்டிருந்தோம். ஏன் நம் முகநூல் பக்கம் க்ளிக் ஆகவில்லை என்று யோசித்தபோது மக்கள் சீரியஸான விசயங்களை, அறிவிப்புகளைக் கூட கொஞ்சம் நகைச்சுவை கலந்து தந்தால் என்று நாடிபிடித்துக்கொண்டோம்.

அது மிகச்சரியாக ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்தது. வயதான பெரியவர்கள் தொடர்பான சில சீரியஸான விபரங்கள் தவிர்த்து மற்றவற்றை மெல்லிய நகைச்சுவையுடன் மீம்ஸ் கலந்து கொடுக்க ஆரம்பித்தோம். பக்கம் சூடுபிடிக்கத்துவங்கியது. இளைஞர்கள் பலரும் எங்கள் செய்திகளை ஷேர் செய்ய ஆரம்பிக்கவே இன்று இந்தியாவின் நம்பர் ஒன் ஆகிவிட்டோம்’ என்கிறார்.