சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை’சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் நடமாடத் தொடங்கியுள்ளது. இதே கீர்த்தி சுரேஷின் மம்மி மேனகா ‘நெற்றிக்கண்’படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் ‘நெற்றிக்கண்’.ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் மகன் ரஜினி கேரக்டருக்கு ஜோடியாக மேனகா என்கிற, தற்போதைய தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா நடித்திருந்தார். இந்த நிலையில் 68 வயதை முடித்து அடுத்த மாதம் 69ம் வயதில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க 27 வயதான கீர்த்தி சுரேஷின் பெயர் தீவிர பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அம்மாவுடன் ஜோடியாக நடித்துவிட்டு மகளுடனும் டூயட் பாடுவது ரஜினிக்கு புதிதல்ல. நடிகை லட்சுமியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யா லட்சுமியுடன் ‘எஜமான்’படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டார். அடுத்து தனது ‘அன்புள்ள ரஜினிகாந்த்’படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவுடன் அதே ‘எஜமான்’படத்தில் தொடங்கி அடுத்தடுத்த படங்களில் டூயட் பாடினார். தற்போது கீர்த்தி சுரேஷின் முறை வந்திருக்கிறது. சிவ சிவா...