ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் என கூறி பெண்ணிடம் ரூ.65 ஆயிரம் மோசடி செய்துள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Online Impersonation Scam : ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் எனக் கூறிக்கொண்டு ஒருவர், 69 வயது பெண்ணிடம் ரூ.65,000 மோசடி செய்துள்ளார். வசோவா காவல் நிலையத்தில் இதுதொடர்பாக அந்த பெண்ணின் மகள் புகார் அளித்திருக்கிறார்.
நடந்தது என்ன?
திங்களன்று, வசோவா காவல்துறையினர் கீனு ரீவ்ஸ் போல நடித்து பெண்ணை ஏமாற்றியதாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண் காமத் அந்தேரி மேற்கில் உள்ள செவன் பங்களோஸில் தனியாக வசிக்கிறார். அவரது 41 வயது மகள் ஸ்நேகா லண்டனில் வசிக்கிறார். காமத் மனநல சிகிச்சை பெற்று வருகிறார். கனரா வங்கியில் அவருக்குக் கணக்கு உள்ளது, அதில் அவரது மகள் பெயரிடப்பட்டுள்ளார். காமத்தின் உடல்நிலை சரியில்லாததால், அவரது மகளுக்கு அவரது தாயின் வங்கிக் கணக்கிற்கான அணுகல் உள்ளது.
ஒரு மோசடிக்காரர் சமூக ஊடகங்கள் மூலம் காமத்தைத் தொடர்பு கொண்டு, தான் ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் என்று கூறி, இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் சேட்டிங் செய்து வந்திருக்கிறார். மேலும் அவரைச் சந்திக்க மும்பைக்கு வருவதாகவும் கூறி இருக்கிறார். அவரது நம்பிக்கையைப் பெற்ற பிறகு, இந்தியா வந்ததும் தனக்கு இந்திய ரூபாய் தேவை எனக் கூறி, தனது ஐடிபிஐ வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றச் சொல்லி இருக்கிறார். அந்த பெண்ணும் உண்மையிலேயே கீனு ரீவ்ஸுடன் பேசுவதாக நம்பி, தனது கனரா வங்கிக் கணக்கிலிருந்து ரூ.65,000ஐ ஐடிபிஐ கணக்கிற்கு மாற்றி இருக்கிறார்.

ஜூன் 30ந் தேதி அன்று பிற்பகல் 1:57 மணிக்கு, காமத்திற்கும் அவரது மகளுக்கு செல்போனில் மெசேஜ் வந்திருக்கிறது, காமத்தின் மகளுக்கு சந்தேகம் வந்து விசாரித்ததில், டெஹ்ராடூனில் உள்ள ஒரு வங்கியில் நஹர் என்ற பெயரில் உள்ள கணக்கிற்குப் பணம் மாற்றப்பட்டது தெரிய வந்திருக்கிறது. அவர் உடனடியாக தனது தாயைத் தொடர்பு கொண்டு, இனி யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
மோசடிக்காரர் 'reeves_1390' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் 'keanu_reeves4576' என்ற டெலிகிராம் ஐடி மூலம் காமத்தைத் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். செப்டம்பர் 8 ஆம் தேதி ஸ்நேகா வசோவா காவல் நிலையத்திற்குச் சென்று இதுதொடர்பாக புகார் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 318(4) (மோசடி) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


