விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 2014ம் ஆண்டு வெளியான "கத்தி" திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசும் படமான அது, தமிழக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் "கத்தி" படத்தின் கதை தன்னுடையது என ராஜசேகர் என்பவர் தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது "தாகபூமி" என்ற குறும்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் "கத்தி" என்ற பெயரில் படமாக எடுத்ததாக குற்றம்சாட்டினர். இதையடுத்து லைகா நிறுவனம், விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கும் படி நடிகர் விஜய், லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கடந்த 5 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில், நடிகர் விஜய் மற்றும் லைகா நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிப்பதாக அதிரடி உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெளியிட்டுள்ளது. 

அவ்வளவு தான் 5 வருட பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்று நினைத்தால், தஞ்சை நீதிபதிகள் "கத்தி" படத்தையும், "தாகபூமி" குறும்படத்தையும் பார்த்துவிட்டு, முகாந்திரம் இருந்தால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை மட்டும் எதிர்மனுதாரராக சேர்க்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தலை மேல் தொங்கும் கத்தியில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.