திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து அவரது உடலை அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.. ஆனால் அதை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, காமராஜர் நினைவிடத்தில் இடம் ஒதுக்கித் தருவதாக கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததோடு, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கித் தரவேண்டும் என கூறினார். நடிகர் ரஜினிகாந்த்தும் இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

கருணாநிதியின் உருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினியும் பங்கேற்றுப் பேசினார். அப்போது கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என உருக்கமாக தெரிவித்தார்.

50 ஆண்டுகளில் எவ்வளவு சோதனைகள், சூழ்ச்சிகள், துரோகங்கள்  எல்லாவற்றையும் வென்று திமுக., தலைவராக இருந்தவர் கருணாநிதி என்றும் , . இவரால் அரசியலுக்கு வந்தவர்கள் லட்சம் பேர். என்னுடன் நட்பு கொள், இல்லையென்றால் என்னை எதிரியாக்கி கொள் என தமிழகத்தில் அரசியல் சதுரங்கம் செய்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

.மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் கருணாநிதிக்கு  இடம் கொடுக்க கோர்ட் அனுமதித்தது. நல்லவேளை நீங்கள் மேல் முறையீடு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நானே களத்தில் இறங்கி போராடி இருப்பேன் என அதிரடியாக தெரிவித்தார்.