தி.மு.க தலைவர் கலைஞர் உடல்நிலையில் கவலைக்கிடமான நிலை ஏற்பட்டுள்ள சூழலில் நடிகர் கமல்ஹாசன் மிகுந்த பதற்றத்திற்கு ஆளாகியுள்ளார். கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் உறுப்புகள் ஒத்துழைக்கும் திறனை வைத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகே எதையும் சொல்ல முடியும் என்று காவேரி மருத்துவமனை கூறியுள்ளது. இதனால் 24 மணி நேரத்திற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தி.மு.க தொண்டர்கள் பதற்றத்தில் உள்ளனர். இதே போல் நடிகர் கமலும் கலைஞர் உடல் நிலையால் பதற்றத்திற்கு ஆளாகியுள்ளார். 

இதற்கு காரணம் என்ன என்றால்? விஸ்வரூபம் 2 ரிலீஸ் டேட். வரும் 10ந் தேதி அன்று விஸ்வரூபம் 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமான சூழலில் உள்ளது. இந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்தால் என்ன ஆகும் என்பது தான் கமலின் பதற்றத்திற்கு காரணம். விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து இருந்தாலும், இந்த ஆண்டு துவக்கத்தில் பெரும் விலை கொடுத்து கமல் வாங்கிவிட்டார். மேலும் தனது செலவில்சில கிராபிக்ஸ் காட்சிகள், போஸ்ட் புரடக்சன் பணிகளை கமல் முடித்துள்ளார். 

இவை எல்லாவற்றையும் விட கமலே படத்தை சொந்தமாக வெளியிட உள்ளார். இதற்காக கடந்த ஒரு மாத காலமாக கமல் மும்பை, டெல்லி, ஐதரபாத், திருவனந்தபுரம் என ஒவ்வொரு நகராக சென்று தனது விஸ்வரூபம் படத்தை விளம்பரம் செய்து வருகிறார். தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள், வார இதழ்கள் என கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 100 பேட்டிகளை கமல் அளித்துள்ளாக சொல்லப்படுகிறது. இந்த அளவிற்கு விஸ்வரூபம் 2 படத்திற்காக கமல் கடுமையாக உழைத்து வரும் நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளது. 

ஆனால் கலைஞர் உடல்நிலையில் காணப்படும் நிலையற்ற தன்மை விஸ்வரூபம் 2 ரிலீசை பாதித்துவிடுமோ என்கிற பதற்றத்தில் கமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆகஸ்ட் 10ந் தேதி திட்டமிட்டபடி விஸ்வரூபம் 2 வெளியாகவில்லை என்றால் படத்தை அடுத்த வெள்ளியன்றும் வெளியிட முடியாது. காரணம், அடுத்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் தயாராக உள்ளன. எனவே இந்த முறை தவறவிட்டால் கமல் விஸ்வரூபத்தை வெளியிட மேலும் பல நாட்கள் காத்திருக்க நேரிடும். அதுமட்டும் இன்றி இவ்வளவு நாட்கள் செய்த விளம்பரமும் வீணாகிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.