இயக்குனர் கார்த்தி சுப்புராஜ்:

இன்ஜினியரிங் மாணவரான கார்த்தி சுப்புராஜின் திரைப்பட இயக்குனர் ஆர்வத்தை முதலில் வெளியே கொண்டு வந்தது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த 'நாளைய இயக்குனர்' என்கிற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த அனுபவத்தையும் திறமையையும் வெளிக்காட்டி இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக நடிகர் விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'பீட்சா'.

குறைந்த பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட இப்படம் இவருக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான சில விருதுகளை பெற்று தந்தது. 

தேசிய விருது:

இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்பராஜ் இயக்கிய, இரண்டாவது படமான 'ஜிகிர்தண்டா' படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது.

வித்தியாசமான படங்கள்:

மிக குறுகிய காலத்திலேயே சிறந்த இயக்குனராக அனைவராலும் அறியப்பட்ட, கார்த்தி சுப்புராஜ், தான் இயக்கும் படங்களில் வித்தியாசமாக எதையாவது வெளிப்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்குமே உண்டு.

அந்த வகையில் தான் இவர் இயக்கிய பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்கள் அமைந்தன.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்த கார்த்தி சுப்புராஜ்:

இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் அனைவருக்குமே உள்ள கனவுகளில் ஒன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய் ஆகியோரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது. இந்த ஆசை கார்த்தி சுப்புராஜுக்கு மிக குறுகிய காலத்திலேயே கிடைத்தது.

கடந்த வருடம் பொங்கல் ரிலீசாக வெளியான 'பேட்ட' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து  இயக்கி இருந்தார்.ஆனால் இப்படம் தலைவரின் ஸ்டைலை கண் முன் நிறுத்தினாலும், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாமல் போனது. 

தயாரிப்பாளர்:

தற்போது இவர் திரைப்பட இயக்குனர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அந்த வகையில், ஏற்கனவே அவியல், மேயாத மான் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் குயின் படத்தையும் தயாரித்துள்ளார்.

மனைவியை நடிக்க வைத்த கார்த்தி சுப்புராஜ்:

இந்நிலையில் தற்போது இயக்குனர் கார்த்தி சுப்புராஜின் மனைவி சத்ய பிரேமா, கணவரின் இயக்கத்தில் நடித்த காட்சிகளை கண்டு பிடித்து வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள். ஏற்கனவே 'பேட்ட' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அப்பாயின்மென்ட் ஆர்டர்  கொடுக்கும் வேடத்தில் நடித்ததை கண்டு பிடித்தவர்கள் தற்போது இறைவி படத்தில், கமலினி முகர்ஜிக்கு தோழியாக நடித்த புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி வருகிறார்கள்.