‘படத்தின் தரத்தைப்பற்றிப் பேசுவதை விடுத்து அதன் வசூல் நிலவரங்கள் குறித்து அலசி ஆராய்வது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம் அல்ல’ என்கிறார் ‘பேட்ட’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக, ரிலீஸாக மூன்றாவது வாரத்தைத் தொட்ட நிலையிலும் ரஜினி, அஜீத் ரசிகர்களுக்கு மத்தியிலான வசூல் பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதிலும் அஜீத் ரசிகர்கள் ரஜினியை சினிமாவை விட்டே காலிபண்ணி விட்டதுபோல் அடித்து ஆடுகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்சினை அவ்வளவாக பேசாமலிருந்த கார்த்திக் சுப்பாராஜ் “எந்த ஓட்டலிலாவது வெளியே இன்று ஆயிரம் இட்லி விற்கப்பட்டது என்று அறிவிப்புப் பலகை வைத்துள் ளார்களா? இல்லையே. உணவு நன்றாக இருக்கிறதா, இல்லையா அது போதும்.

அதே போலத்தான் திரைப்படங்களும். படம் பிடித்திருக்கிறதா இல்லையா, நன்றாக இருக்கிறதா, சென்று பார்ப்போம். இப்படி வசூலை வைத்துப் பேசுவது தேவையில்லாத வணிகமயமாக்கல். இப்படி வசூல் நிலவரங்களை பற்றிப் பேசுவதெல்லாம் சில பேருக்கு தொழில். இப்படியான தகவல்களைப் போட்டு ட்ராக்கர்ஸ் என்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே இருக்கின்றனர்” என்று அஜீத் ரசிகர்களை நேரடியாக வெளுத்து வாங்கியிருக்கிறார்.