தமிழ் கலை மற்றும் இலக்கிய உலகம் எத்தனையோ சர்ச்சைகளை பார்த்திருக்கிறதுதான். ஆனாலும் கடந்த ஆண்டில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி எழுப்பிய ‘மீடூ’ பூதாகர தாக்குதலெல்லாம் பல காலம் நிலைத்து நின்று, அசைபோடப்பட்டு, கவலைப்பட கூடியது. 

பாலியல் சர்ச்சையில் இருந்து மெதுவாக வெளிவந்து, மீண்டும் இலக்கிய கூட்டங்களில் தலைகாட்ட துவங்கியிருந்தார் வைரமுத்து (இது பற்றி ஸ்பெஷல் கட்டுரையை வெளியிட்டது நமது இணையதளம்தான். நினைவிருக்கும்!). ஆனால் இதோ அவர் மீது அடுத்த அடி விழுந்திருக்கிறது மிக உக்கிரமாக. இது செக்ஸ் புகார் இல்லை! ஆனால் கவிஞர் தன்னை மிக செருக்கு நிறைந்தவனாக காட்டிக் கொள்ளும் கருவியாக பயனபடுத்திய ’திரைப்பாடல்’ திறமை பற்றியது. 

ஆம், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ‘வாகை சூட வா’ படத்தில் இடம்பெற்ற ‘சர சர சாரக்காத்து’ எனும் பாடலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பல விருதுகள் கிடைத்தன. அந்தப் பாடலின் வரிகளையும், வார்த்தைகளையும் கொண்டாடியது தமிழ் உலகம். இந்நிலையில் இந்தப் பாடலை உண்மையில் எழுதியது வைரமுத்து அல்ல, கார்த்திக் நேதா எனும் கவிஞர்தான். இவர்தான் சமீபத்தில் ரிலீஸாகி சக்கைபோடுபோட்ட’96’ படத்தில் இடம்பெற்ற காதலே! காதலே! பாடலை எழுதியவர். காதலே காதலே பாடல் பிரபலமானது மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நேதா, இந்த தகவலை லேசாய் தட்டிவிட்டு வருத்தப்பட்டிருக்கிறார். 

நேதாவின் தகவலை வாகை சூட வா! படத்தின் இயக்குநரான சற்குணம், இசையமைப்பாளர் ஜிப்ரான் என யாருமே மறுக்கவில்லை. இவ்வளவு ஏன், வைரமுத்துவும் கூட மறுக்கவில்லை. தன் மீதான குற்றச்சாட்டு பொய் என்றால் இந்நேரம் பிரளயத்தை கிளப்பியிருப்பாரே வைரம், ஆனால் அவர் அமுங்கி அமைதியாக இருப்பதே புகாரானது உண்மை என்பதை சொல்கிறதோ? என்கிறார்கள் திரை மற்றும் இலக்கிய உலக விமர்சகர்கள். வாகை சூட வா படத்தில் அந்த பாடலை எழுதி கார்த்திக் நேதா கொடுத்துவிட, அதை இயக்குநரிடம் வாங்கி முன்னும் பின்னும் சில வரிகளை  மாற்றிப்போட்டு, அந்தப் பாடலுக்கு தன் பெயரை போடச்சொல்லி விட்டாராம் வைரமுத்து! என தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்தப் பாடல் விருது பெற்று கொண்டாடப்பட்ட போது ‘இந்தப் பாடலை நான் எழுதிய சூழலே ஒரு சுவாரஸ்யம்...’ என்று பேட்டி கொடுத்து பெருமிதமும் பட்டிருக்கிறார் வைரமுத்து. அவர் அன்று சொன்ன வரிகளை அப்படியே எடுத்துப் போட்டு, ‘போலி போலி அத்தனையும் போலி இவரிடம். இவர் பெயரில் வெளியான இன்னும் எத்தனை படைப்புகளின் உண்மை படைப்பாளி யாரோ? அரசியலும், சினிமா உலக முக்கியஸ்தர்களும் தன் நெருக்கத்தில் இருக்கும் மிதப்பில் வைரமுத்து மிக மிக மோசமான ஆட்டங்களை ஆடியிருக்கிறார். இனி அவருக்கு சறுக்கல் காலம்தான்.’என்று சோஷியல் மீடியாக்களில் போட்டுப் பொளக்கிறார்கள் விமர்சனங்களை. 

இதுவரையில் இதற்கு ரியாக்ட் செய்யவில்லை வைரமுத்து. ‘ஆண்டாளை பழித்ததற்கு அவள் வைரமுத்துவை விரட்டி விரட்டி பழிவாங்குகிறாள்.’ என்றும் ஒரு சாரார் ஆன்மிக கோண விமர்சனத்தை கிளப்பியுள்ளனர். வைரமுத்துவை இன்னும் ரசிக்கும் வாசிப்பாளர்கள் “ இப்படி பற்றி எரிகிறது சர்ச்சை. ஆனால் இன்னும் நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் கொஞ்சம். ‘என் படைப்புகள் என்னுடையவையே! நான் நல்லவன் தான்! அப்படின்னு ஒரு பொய்யாவது சொல்லுங்களேன் வைரமுத்து!’ என்கிறார்கள் கையறு நிலையில்.”கவிஞரே காதில் விழுகிறதா?!