முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ். மேலும் குறுகிய காலத்தில் சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்ததோடு, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை இயக்கம் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

அந்த வகையில், கார்த்தி சுப்புராஜ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய "பேட்ட" திரைப்படம் மூன்று வாரங்களை கடந்தும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. 

ரசிகர்களிடம் நல்லபடியாக விமர்சனங்களை பெற்று... வசூல் சாதனை செய்து வரும் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கிண்டி அருகே உள்ள பிரபல காசி திரையரங்கில் 'பேட்ட' படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களோடு 'பேட்ட' திரைப்படத்தை பார்த்தார். பின் இது குறித்த பேசிய அவர், மூன்று வாரங்கள் ஆகிவிட்டபோதிலும் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது போன்ற உணர்வு உள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த பேசுகையில், "நடிகர் தனுஷை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக கூறினார்".  ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் 'பேட்ட' படத்தால் இந்த படம் தள்ளிப்போனது. இந்த படத்தை தான் தற்போது கார்த்தி சுப்புராஜ் கையில் எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.