எதையும் சாதிக்க முடியும் என்று கற்றுத்தந்தவர்! அண்ணன் சூர்யாவுக்கு கார்த்தி கூறிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தன்னுடைய 49-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும், அண்ணன் சூர்யாவுக்கு அவரின் தம்பி கார்த்திக் நெகிழ்ச்சியான வார்த்தைகளுடன், தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக பல படங்களில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கியவர் தான் சூர்யா.
சினிமா மீது உள்ள ஆர்வத்தால் லயோலா கல்லூரியில் சேர்ந்து நடிப்பு சம்பந்தமான படிப்பை முடித்த சூர்யா, பின்னர் கார்மெண்ட்ஸ் பிசினஸில் சில காலம் கவனம் செலுத்த துவங்கினார். இதனால் தன்னை தேடி வந்த 'ஆசை' படத்தின் வாய்ப்பை ஏற்க மறுத்த சூர்யா, சில வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் வசந்தத்தை சந்தித்து திரைப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். வசந்த் அந்த நேரத்தில் விஜய் - அஜித் இணைந்து நடிக்க இருந்த நேருக்கு நேர் திரைப்படத்தை இயக்க தயாராகி வந்தார். ஒரு சில காரணங்களால் அஜித் இந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவிக்க, பின்னர் அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது.
இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க! தளபதி விஜயுடன் நேரடியாக மோத துணிந்த விஷால்?
1997 ஆம் ஆண்டு தன்னுடைய 22 ஆவது வயதில் சூர்யா ஹீரோவாக 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து காதல் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தாலும், தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அதற்கு ஏற்ற போல் தன்னையும் மாற்றிக்கொண்டு 'நந்தா' படத்தில் நடித்து பலரையும் மிரள வைத்தார். இதை தொடர்ந்து சூர்யா நடித்த 'காக்க காக்க', 'பிதாமகன்', 'பேரழகன்', 'கஜினி', 'வாரணம் ஆயிரம்', 'அயன்', 'சிங்கம் சீரிஸ்', 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
குறிப்பாக சூரரைபோற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் நடிகர் சூர்யா வென்றார். சூர்யாவைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கார்த்தியும் தன்னுடைய அண்ணன் வழியிலேயே சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய 49 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அண்ணன் சூர்யாவுக்கு நெகிழவைக்கும் வார்த்தைகளுடன் கார்த்தி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் போட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினாலும், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் எதையும் கற்று சாதிக்க முடியும் என்று எனக்கு கற்றுத் தந்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரசிகர்கள் எங்களுக்கு அதிக அதிக அன்பை கொடுத்து இந்த சமூகத்தில் அன்பை பரப்பி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.