karthi speech in theeran athigaram onru press meet
இயக்குனர் வினோத் இயக்கியுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்தப் படத்தின் ட்ரைலர் என்று கூட கூறலாம். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சிறுத்தை படத்திற்குப் பின் கார்த்தி இந்தப் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக , ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு, இன்று நடந்தது இந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது :-
தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்குப் பின் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான், ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு படப்பிடிப்புக்காக சென்றோம். அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரைத் தாங்கிக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம்.
இந்தப் படத்தின் கதை நான் “ சிறுத்தை “ படத்துக்காக படப்பிடிப்பில் இருந்தபோதே எனக்குத் தெரியும். அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மைச் சுற்றியே இந்தக் கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்தக் கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன்.
நாம் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே வரும் யாரும் நம்முடைய கண்ணைப் பார்க்க மாட்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஒருவர் நம்முடைய கண்ணைப் பார்ப்பார் அவரிடம் சென்று பேசினால் அவர் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நம்மிடம் சொல்லுவார் என்று என்னிடம் “ மாற்று உலகத்தை “ பற்றி அதிகம் படித்த என்னுடைய நண்பன் கூறுவார்.
தீரன் அதிகாரம் ஒன்று ...முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும். ராகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல் , காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல் , காரை வேகமாக ஒட்டிச்செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல் , மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்தப் படத்தில் தந்துள்ளேன். தீரன்-ல் நான் இயக்குநரின் நடிகராகத் தான் இருந்துள்ளேன். இந்தப் படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றார் கார்த்தி.
