'கைதி' படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் கார்த்தி, இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்து வந்தார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முதல்முறையாக கார்த்தியுடன் நடிகை ஜோதிகா இணைந்து நடித்துள்ளார். 

இதில், இருவரும் சகோதர, சகோதரியாக நடித்துள்ளனராம். மேலும், அப்பாவாக நடிகர் சத்யராஜும், ஹீரோயினாக நிகிலா விமலும் நடித்துள்ளனர்.
கொடைக்கானலைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, ஏற்கெனவே ரிலீசுக்கு ரெடியாகயிருந்தது. 

ஆனால், 'கைதி' படத்தின் ரிலீசால், ஜீத்து ஜோசப் படத்தின் வெளியீடு தாமதமானது. தற்போது 'கைதி' படம் சூப்பர் ஹிட்டடித்துள்ளதால், இந்தப் படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா இன்று (நவ.15) வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படியே, தனது டுவிட்டர் பக்கத்தில் சரியாக மாலை 6 மணிக்கு கார்த்தி - ஜோதிகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா.


கார்த்தியின் 20வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, 'தம்பி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'தம்பி'. அதன் தலைப்பு உரிமையை வாங்கி, இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர். இதேபோல், மலையாளத்தில் இந்தப் படத்துக்கு டோங்கா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கார்த்தியும், ஜோதிகாவும் இணைந்திருக்கும் இந்த அசத்தலான ஃபர்ஸ்ட் லுக், சோசியல் மீடியாவில் லைக்ஸை குவித்து வருகிறது.