நடிகர் சூர்யா மிகவும் நம்பி இருந்த, 'NKG' மற்றும் 'காப்பான்' என இரண்டு படங்களும் இந்த வருடம் வெளியாகி தோல்வி படங்களாகவே அவருக்கு அமைந்தது. இதனால் கண்டிப்பாக வெற்றி படத்தை கொடுத்தே தீர வேண்டும் என்கிற நிலையில் உள்ளார்.

அடுத்ததாக, பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'சூரரை போற்று' திரைப்படம், டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  

இது ஒரு புறம் இருக்க,  சூர்யா அடுத்த படத்தை, யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதற்கான பதிலை சூர்யாவின் சகோதரர் கார்த்தி தற்போது லீக் செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற, 'கைதி' படத்தின் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கார்த்தி,  அண்ணன் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

ஹரி, சூர்யா இயக்கத்தில்... இதுவரை வெளியான அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், சூர்யா மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார் என தெரிகிறது. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு, ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம் 3' திரைப்படம் ரிலீஸ் ஆனது.

எனவே, சூர்யாவை வைத்து, ஹரி அடுத்ததாக 'சிங்கம் 4 ' படத்தை உருவாக்க உள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் ஹரி - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.