Karnataka highest award for singer Yesudas and actress Kanchana

பாடகர் இயேசுதாஸுக்கும், நடிகை காஞ்சனாவுக்கும் கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா வழங்கி கௌரவித்தார்.

கர்நாடக மாநிலம் உருவானதை நினைவுகூறும் வகையில் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது ராஜ்யோத்சவா விருது. பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

கர்நாட மாநிலம் உருவாகி 62 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்த 62 பேருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கர்நாடக அரசு கௌரவித்தது.

இதில் திரைப்படத் துறையிலிருந்து பின்னணி பாடகர் கே.ஜே.இயேசுதாசும், பழம்பெரும் நடிகை காஞ்சனாவும், இந்த விருதை பெற்றனர்.

பெங்களூவில் உள்ள இரவீந்திரா கலாஷேத்திராவில் நடந்த விழாவில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா இந்த விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

கர்நாடக கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் உமாஜி விருது பெறுகிறவர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு முதல்வர் சித்தராமய்யா ஒரு இலட்சம் ரொக்கம், 20 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட கேடயம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.

ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமான காஞ்சனா, தமிழ், மற்றும் கன்னடத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பதும், கே.ஜே.யேசுதாஸ் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பதும் கொசுறு தகவல்.