‘89ல் சிறுபட்ஜெட் படமாக ரிலீஸாகி தமிழ் சினிமா அத்தனை ரெகார்டுகளையும் நலம் விசாரித்த படம் இளையராஜா, ராமராஜன், கங்கை அமரன் கூட்டணியின் ‘கரகாட்டக்காரன்’. தற்போது வரை அப்படத்தின் பாடல்களும், கவுண்டமணி செந்தில் காமெடியும் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவிருப்பதாக இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன்.

‘அண்ணே ஒரு வெளம்பரம், சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா, ஒரு வாழைப்பழம் இங்க இருக்கு இன்னொன்னு?’ என்று இன்றும் வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் காமெடிகளும், ‘பாட்டாலே புத்தி சொன்னார்’ தொடங்கி ‘குடகுமலைக் காற்றின் வழியாக அத்தனை இனிமையான பாடல்களும் அமைந்த கரகாட்டக்காரன் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற ஹிட் படம். 

படம் ரிலீஸாகி 30 ஆண்டுகள் ஆனதை யாரும் நினைவு படுத்தினார்களா அல்லது வேறு எதாவது உந்துதலா என்று தெரியவில்லை திடீரென ‘கரகாட்டக்காரன் 2’படத்தை மிக விரைவில் துவங்க உள்ளதை கன்ஃபர்ம் செய்துள்ளார் கங்கை அமரன்.

இதுகுறித்துப் பேசிய அவர்,”கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கச்சொல்லி எவ்வளவோ பேர் கேட்டிருக்கிறார்கள். இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. ராமராஜன் உட்பட அப்படத்தில் உள்ள அனைவரிடமும் பேச ஆரம்பித்திருக்கிறேன். கதை கரகாட்டக்காரனில் இடம்பெற்றவர்களின் வாழ்க்கையின் தொடர்ச்சியாக அவர்களது இரண்டாவது தலைமுறையைப் பற்றியதாக இருக்கும். அதனால் பழைய நடிகர்களுக்கு இணையாக இன்றைய நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெறுவார்கள். முறையான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்’ என்கிறார்.