தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்றபோது.. பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
பிரபல கன்னட நடிகர் விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய ராகவேந்திரா. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையெல்லாம் வாங்கியுள்ள இவர், கடந்த 2007-ம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு செளர்யா என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.
விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வா என்கிற திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த விஜய ராகவேந்திரா, சில நாட்கள் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக தன் மனைவி மற்றும் மகன் உடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... மார்பக புற்றுநோய்... சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகை அங்காடித் தெரு சிந்து காலமானார்
சுற்றுலா சென்ற இடத்தில் தான் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவரை பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுற்றுலா போன இடத்தில் பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பந்தனாவின் உடலை இந்தியா கொண்டுவர அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மனைவியை இழந்து வாடும் நடிகர் விஜய ராகவேந்திராவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். விஜய ராகவேந்திரா - ஸ்பந்தனா ஜோடி தங்களது 16வது திருமண நாளை கொண்டாட இன்னும் 19 நாட்களே இருந்த நிலையில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... பாடகி சின்மயி மகன்களுடன் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடிகை சமந்தா போட்ட கியூட் டான்ஸ் - வைரலாகும் வீடியோ