முகமூடி பின்னால் இருக்கும் முகங்களை அம்பலப்படுத்தும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

திரையுலகம், இசையுலகம், அரசியல்வாதிகள், திரைத்துறையினர், விளையாட்டுத்துறையினர் என பல்வேறு தளங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொலைக்கு ஆளாகுபவர்கள், சமூக வலைத்தளங்களில் மீடூ இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர். 

மீடூ ஹாஷ்டாக் மூலம் வெளியாகும் பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. பெண்கள்-குழந்தைகள் நல அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த குழுவில் மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர்கள் உள்ளடங்கியோர் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகி சின்மயி, வைரமுத்து மீது புகார் தெரிவித்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை காவல் துறை எடுக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். மீடூ பிரச்சாரத்துக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், முகமூடி பின்னால் உள்ள முகங்களை அம்பலப்படுத்தும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கனிமொழி எம்.பி. கூறியிருப்பதாவது: மீடூ பிரச்சாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும். உண்மை உலகிற்கு தெரிவிக்கப்பட வேண்டும். இது பாலியல் தொல்லைகளை நிறுத்துவதற்கு ஒரு படி. முகமூடி பின்னால் உள்ள முகங்களை அம்பலப்படுத்தும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். குற்றவாளிகள் சோதனையிலும் பாதிக்கப்பட்டவர்களிலும் வைக்கப்படட்டும். குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களிடம் அல்ல என்று அதில் பதிவிட்டுள்ளார்.