‘தலைவி’ என்ற பெயரில் உருவாக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தின் கதையைக் கேட்டபோது, அவர் வாழ்வில் சந்தித்த பல சவால்களை ஒரு நடிகையாக நானும் சந்தித்திருக்கிறேன் என்பதால் அதில்நடிக்க உடனே சம்மதித்தேன் என்கிறார் நடிகை கங்கனா ரனாவத்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நேற்று முன் தினம் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக இவருக்கு 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு முரட்டு வதந்தியும் நடமாடி வருகிறது.’

இந்நிலையில் ‘தலைவி’ படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து பேட்டி அளித்துள்ளார் கங்கனா. ‘பொதுவாகவே தமிழ் ,தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளில் நடிக்க அதிக ஆர்வமுள்ளவள் நான். அப்போதுதான் நாடு முழுக்க அறிந்த நடிகையாக இருக்கமுடியும். ‘தலைவி’ படத்தின் கதையைக் கேட்டபோது மிரண்டுபோய்விட்டேன். பல இடங்களில் அக்கதை என் வாழ்க்கை சம்பவங்களோடு ஒத்துப்போனது. ஒரு நடிகையாக ஜெயலலிதா சந்தித்த பல சவால்களை நானும் சந்தித்திருக்கிறேன்.

ஆக்சுவலாக தற்போது நான் பணியாற்றிக்கொண்டிருந்தது எனது சுயசரிதை தொடர்பான படத்தை இயக்கத்தான். ஆனால் ‘தலைவி’ படக் கதையைக் கேட்டபிறகு, முதலில் அதில் நடிப்பது என்று திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டேன். இப்படம் கண்டிப்பாக இந்தியிலும் டப் செய்யப்படும்’என்கிறார் கங்கனா.