vikram express :டபுள் டக்கர் ரயிலில் புரமோஷன்... மாஸ் காட்டும் விக்ரம் படக்குழு- வீடியோ பார்த்து மெர்சலான கமல்
vikram express : கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு செல்லும் டபுள் டக்கர் ரெயிலில் கமலின் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்டு பிரம்மாண்டமாக புரமோட் செய்துள்ளனர்.
நடிகர் கமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் 2. கடந்த 2018-ம் ஆண்டு இப்படம் வெளியானது. அதன்பின் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தற்போது அவர் நடித்துள்ள விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. கைதி, மாநகரம், மாஸ்டர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலரை வருகிற மே 18-ந் தேதி பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளனர்.
விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், தற்போது அப்படத்தின் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு செல்லும் டபுள் டக்கர் ரெயிலில் கமலின் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்டு பிரம்மாண்டமாக புரமோட் செய்துள்ளனர். விக்ரம் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த ரயில் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த ரயிலை பார்த்ததும் மக்கள் ஆரவாரத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கமல், அதில் கூறியிருப்பதாவது : “ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை, மகாநதி, தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது”. இவ்வாறு கமல் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்.... Thalapathy 67 :பீஸ்ட் தோல்வியால் இறங்கி அடிக்க தயாரான விஜய்... ‘கே.ஜி.எஃப் 2’ பிரபலத்துடன் கூட்டணி அமைக்கிறார்