முழுவீச்சில் நடைபெறும் விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.

நடிகர், நடன இயக்குனர், தொகுப்பாளர், அரசியல்வாதி என ஆல்-ரவுண்டராக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கி, 2 வார சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டார். கொரோனா பாதிப்புக்கு பின் ஓய்வெடுத்து வந்ததால் விக்ரம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்த கமல் தற்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக விக்ரம் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஜெயராம் காளிதாஸ் என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பல கட்டங்களாகப் படப்பிடிப்பு நடந்து வந்தது. உலகநாயகன் கமல் ஹாசனுக்கு ஏற்பட்ட கொரோனோ தொற்று காரணமாக சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டார். ஓய்வுக்குப் பின் புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இன்று முதல் சென்னையில் நடக்கும் விக்ரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

முழுவீச்சில் நடைபெறும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாஸில் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. திரைப்படம் கோடை விடுமுறையின்போது திரைக்கு வரவிருப்பதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அவரது குழுவினரும் இரவு பகல் இடைவெளியின்றி உழைத்து வருகின்றனர். 

விக்ரம் படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன், எடிட்டராக பிலோமின் ராஜ், கலை இயக்குனராக சதீஷும், ஆக்‌ஷன் டைரக்டராக அன்பு, அறிவும், நடன இயக்குனராக சாண்டியும் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.