சூப்பர் ஸ்டார் ரஜினியின் 69 வது பிறந்தநாளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ...என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்...என்று வாழ்த்தியுள்ளார் கமல்.

சினிமாவில் வெகு நீண்டகால போட்டியாளர்களெனினும் தங்களது தனிப்பட்ட நட்பில் எப்போதும் விரிசல் விழுந்து விடாமல் கவனமாக இருந்துவருபவர்கள் கமலும் ரஜினியும். அரசியல் ரீதியாக சில சமயங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டது உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் பரஸ்பரம் இதுவரை ஒருவர் ஒருவர் தாக்கிக்கொண்டதில்லை.

1975ல் அபூர்வராகங்கள் மூலம் இணைந்து நடித்த கமலும் ரஜினியும் மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், 16 வயதினிலே, அவர்கள், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, தப்புத்தாளங்கள், தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனின் அற்புத விளக்கு, நட்சத்திரம், தில்லு முல்லு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

ரஜினி சூப்பர் ஸ்டாராகவும், கமல் உலக நாயகனாகவும் உயர்ந்த பிறகு அவர்கள் இருவரையும் இணைத்து படமெடுக்க பாலசந்தர், பாரதிராஜா தொடங்கி கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் உட்பட பலர் முயன்றபோதும் அது நடைபெறவில்லை.

கடைசியாக இம்முயற்சியில் ஈடுபட்டவர் இயக்குநர் ஷங்கர். ’2.0’வில் அக்‌ஷய் குமார் நடித்த பாத்திரத்தில் முதலில் ஷங்கர் அணுகியது கமலைத்தான் ‘இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று நானும் ரஜினியும் பரஸ்பரம் எடுத்த முடிவிலிருந்து எந்த காரணத்துக்காகவும் பின் வாங்குவதாக இல்லை’ என்று கதையைக்கூட கேட்காமல் ‘நோ’ சொன்னார் கமல்.