வடிவேலு காமெடி கிங்காக பெயர் பெற்றிருக்கலாம். ஆனால் அவருக்குள் மிக அருமையான குணச்சித்திர நடிகர் ஒளிந்திருக்கிறார் என்பதை வெளிக்கொண்டு வந்தவர் கமல் ஹாசன். அதுவும் வடிவேலு சினிமா துறைக்கு வந்த புதிதிலேயே இதை செய்து காட்டியவர். 
அந்தப் படம், தமிழ் சினிமாவின் மைல்கல் திரைப்படங்களில் ஒன்றான தேவர் மகன். அந்தப் படத்தில் கமல் வீட்டில் கிடந்து வேலை செய்யும் உதவியாளர்களில் ஒருவராக ‘இசக்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வடிவேலு. 


கதைப்படி, சாதிய பிரச்னை பற்றி எரியும் அந்த கிராமத்தில் கமல் மற்றும் கவுதமியின் விபரீத ஆசையினால் வடிவேலுவின் கை வெட்டப்பட்டுவிடும். ஆஸ்பத்திரியில் தன்னைப் பார்த்து வருந்தும் கமலிடம் ’விடுங்கய்யா. உயிர் மண்ணுக்கு, உடல் சின்னய்யாவுக்கு. என்ன எழவு  திங்குற கையில கழுவணும், கழுவுற கையில திங்கணும்.’ என்று ஒரு டயலாக் பேசுவார். சாதி மோதல்களால் விளையும் பயங்கரங்களின் கோரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய வாக்கியம் இது. 


அதேபோல் இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் இறந்து போகும் ஸீனில் வடிவேலு ஒப்பாரி வைத்து அழுது நடித்தபோது சிவாஜியே மனம் திறந்து பாராட்டியிருந்தார். இப்படித்தான் வடிவேலுவுக்கு மிகப்பெரிய கிரீடமாக அமைந்தது தேவர் மகன். 
இப்போது கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கிறான்’ எனும் பெயரில் புதிய படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். லைக்கா தயாரிப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கமலின் இயக்கம் நடிப்பு என்று செம்ம காம்போவில் உருவாகும் இந்தப் படத்தின் கதை தேவர் மகனின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளது! அப்படியிருந்தால் பழைய ஒத்தக்கை இசக்கியாகவே வடிவேலு இதிலும் நடிக்க இருக்கிறார்! என்று தகவல். 


ஒருவேளை ‘தலைவன் இருக்கிறான்’ வேறு கதை என்றாலுமே கூட வடிவேலு அந்தப் படத்தில் நடிப்பது உறுதி! என்கிறார்கள். 
‘ஒரு பெரிய படத்தின் அறிவுப்புடன் எனது அடுத்த ரவுண்டை துவக்குகிறேன்!’ என்று வடிவேலு சமீபத்தில் சொன்னது கமல் படத்தைத்தான்! என்கிறார்கள். 
வீ ஆர் வெயிட்டிங் வடிவு!