அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு குறித்து, நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது இளைஞர்கள் நடத்திய தன் எழுச்சிப் போராட்டத்துக்கு டுவிட்டர் வழியாக ஆதரவு தெரிவித்து நெறிப்படுத்தினார். தமிழர்களை ‘பொறுக்கி’ என்று சுப்பிரமணிய சாமி அவதூறாக பேசிய போது பொங்கி எழுந்து, தனது கண்டனத்தை தமிழன் என்ற முறையில் பதிவு செய்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்கூட்டம் கூடி, சட்டசபைத் தலைவராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்துள்ளனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா திடீரென சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து, தனது எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்தார். இதனால், தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பான சூழல் நிலவியுள்ளது. அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால், அவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்த சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்லது.

இது குறித்து டுவிட்டரில் நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது-

சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை வழங்கப்படுகின்ற தீர்ப்பில் நீதியும் நியாமும் கலந்து இருத்தல் வேண்டும். நாளை வழங்கப்படுகின்ற தீர்ப்பு என்பது வேறு; இப்போதுள்ள அரசியல் குழப்பத்துக்கு தீர்வு என்பது வேறு. நாளை என்பதும் என்னைப் பொருத்தவரை மற்றொரு நாள் தான். ஆதலால், பொறுமையாக இருப்போம். பொறுமையாக இருந்தவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.