சமீபத்திய மேடைதோறும் இசைஞானி இளையராஜாவை எனது சொந்த அண்ணன் போன்றவர் என்று பாசம் பொங்க விளித்துவரும் கமல், தனது ‘தலைவன் இருக்கிறான்’படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்திருக்கிறார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல் நடித்து வந்த ‘சபாஷ் நாயுடு’படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு வேறொரு படத்தை கமல் நடித்துத்தரவிருக்கிறார் என்ற செய்தியை முன்னரே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் நேற்று இரவு அச்செய்தியை உறுதி செய்த கமல் ‘தலைவன் இருக்கிறான்’படத்தில் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

கமல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய கடைசிப்படம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் துவங்கி 2000 தீபாவளிக்கு வெளியான ‘தெனாலி’. ஷங்கரின் ‘இந்தியன் 2’வில் ரஹ்மானுடன் தான் பணியாற்றப்போகிறோம் என்று நினைத்திருந்த கமலுக்கு அனிருத்தை இசையமைப்பாளராக அறிவித்து அதிர்ச்சி அளித்திருந்தார் ஷங்கர்.இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தலைவன் இருக்கிறான்’க்காக ரஹ்மானுடன் இணைந்திருக்கிறார் கமல்.