கமல் ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய முதலும் கடைசியுமானப் படம். இதையடுத்து ரோபோ எனும் படத்தில் இருவரும் சேருவதாக இருந்து, தயாரிப்புத் தரப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இப்போது 22 வருடங்கள் கழித்து, இந்தியன் 2 மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா.

தற்போது 2.0 படம் வெளியாகிவிட்டதால், முழுமையாக இந்தியன் 2 படத்தில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இப்படத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணி நவம்பர் 12ஆம் தேதி தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இப்படத்துக்காக இந்தியன் தாத்தா கெட்டப்பை மீண்டும் கமலுக்கு போட்டுப் பார்த்திருக்கிறார் ஷங்கர். அதை வைத்து ஒரு போட்டோ ஷூட்டையும் முடித்துவிட்டார். மேலும், மீண்டும் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமலைப் பார்த்த போது சிலிர்த்துவிட்டதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார் ஷங்கர்.