‘எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பதற்காக வில்லன் கோட்சேவை கதாநாயகனாக ஏற்க முடியாது. எனக்குக் கதாநாயகன் என்றால் அது எப்போதும் காந்திதான்’ என்றுஅதிமுக, பிஜேபி கட்சியினருக்கு அதிரடியாக பதிலளித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்.

இன்று சற்றுமுன்னர் நடைபெற்ற இயக்குநர், நடிகர் இரா.பார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு சைஸ் 7’ பட ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு காரசாரமாக அரசியல் பேசிய கமல்,’நான் காந்தியின் ஆள். அவரைக் கதாநாயகனாக வாழ்நாள் முழுக்க பாவித்து அவர் தொடர்பான புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வருபவன். இன்று யாரோ எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பதற்காக வில்லன் ஒருவரை கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளும் ஆள் நானல்ல.

பார்த்திபன் தனது படத்திற்கு ‘ஒத்தச்செருப்பு’ என்று பெயர் வைத்திருப்பதால் காந்திக்கு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அவர் ஒருமுறை ரயிலில் பயணம் செய்த போது ஒரு செருப்பு தவறி ப்ளாட்ஃபார்மில் விழுந்துவிட்டது. ரயில் வேகம் பிடித்துவிட்டதால் யாருக்காவது பயன்படட்டுமே என்று வீசி எறிந்தார் அவர். இன்று அரசியல் மேடையில் என் மீது செருப்பு வீசப்படுவதையும் கூட நான் அப்படித்தான் பார்க்கிறேன். 

என் எதிரிகள் வீசியதில் ஒரு செருப்பு மட்டும்தான் என் கைக்கு வந்திருக்கிறது. அந்த இன்னொரு செருப்புக்காக நான் காத்திருக்கிறேன்’ என்று காரசாரமாகப் பேசிய கமல் பார்த்திபனின் ‘ஒத்தச் செருப்பு’ வெற்றிபெற வாழ்த்தி விடைபெற்றார்.