‘ஒரு முறை மனம் வெறுத்துப்போய் சினிமாவை விட்டே போகிறேன் என்று ரஜினி என்னிடம் சொன்னபோது, என் சுயநலம் கருதி சினிமாவை போறதா இருந்தா சும்மா இருக்கமாட்டேன். நடக்குறதே வேற என்று அவரை மிரட்டினேன்’என்று தனது பிறந்தநாள் விழாவில் கலகலப்பூட்டினார் கமல். கமலின் பேச்சை மெய் மறந்து ரசித்தார் ரஜினி.

மூன்று நாள் கொண்டாட்டங்களின் முதல் நாளாக நடிகர் கமல்ஹாசன் சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை, பரமகுடியில் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ராஜ்கமல்அலுவலகத்தில் நிறுவப்பட்ட இயக்குனர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.இந்த சிலை திறப்பு விழாவில், கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். கே.பாலசந்தரின் மகள் புஷபா கந்தசாமி, இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரமேஷ் அரவிந்த், நாசர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்டு முதலில் பேசிய ரஜினி,’என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன், குரு பாலச்சந்தர் தான்.எனது கலையுலக அண்ணன் கமல்ஹாசன்’என்று கூற அதைத் தொடர்ந்து பேசிய கமல், ரஜினிக்கும் தனக்குமான பந்தம் குறித்து மனம் திறந்து பேசினார்.’ரஜினியும் நானும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்று தெரிந்தால் எங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்கள் ஆடிப்போய் விடுவார்கள்.எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. ஒரு முறை கொஞ்சம் மனம் வெறுத்துப்போய் இருந்தவர், நான் சினிமாவை விட்டே ஒதுங்கிவிட நினைக்கிறேன் என்று சொன்னபோது, அப்படியெல்லாம் போக முடியாது. மீறிப்போன நடக்குறதே வேற என்று மிரட்டினேன். ஏனென்றால் அவர் இல்லையென்றால் என் ஆட்டம் சூடு பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்.

ஒரு கால்பந்தாட்டத்தின் இரு கோல் போஸ்ட் போன்றவர்கள் நாங்கள் என்பது எனக்குத் தெரியும். ஒரு கோல் போஸ்ட் இல்லாவிட்டால் ஆட்டம் சூடு பிடிக்காது என்பது தெரிந்தே அவ்வாறு சொன்னேன். துவக்க நாள்களிலிருந்தே நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். ரஜினிக்கு இப்போது வாழ்நாள் விருது கிடைத்திருக்கிறது என்பதே மிகத் தாமதமான அங்கீகாரம்’என்றார் கமல்.