கமல்,ஷங்கர் காம்பினேஷனின் ‘இந்தியன் 2’படம் அடுத்த கட்டத்தை நோக்கி முழு மூச்சாக நகர்ந்துள்ள நிலையில் முதன் முதலாக கமலின் 90 வயதான கெட் அப் படங்கள் சில வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பல மாத தடங்கல்களுக்குப் பின்னர் டேக் ஆஃப் ஆகியிருக்கும்’இந்தியன்2’படப்பிடிப்பில் கமல் முழு வீச்சில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். சென்னையின் புறநகர், மற்றும் ஆந்திர ராஜமுந்திரி சிறைச்சாலை ஒன்றில் சில தினங்கள் நடந்த படப்பிடிக்குப் பின்னர் தற்போது படப்பிடிப்புக் குழுவினர் போபாலில் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சுமார் 40 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் நேற்று முதன்முறையாக படத்தில் இடம் பெறும் கமலின் 90 வயது கெட் அப் வெளியானது.

இந்தியன் படத்துக்கு போலவே வெளிநாட்டு மேக் அப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இப்படத்துக்கும் கமலின் மேக் அப்புக்கு பிரத்யேக கவனம் செலுத்தப்படுகிறதாம். முந்தைய படத்தில் 60 வயது முதியவராக வந்த கமல் இப்படத்தில் 90 வயதான வேடத்தில் தோன்றுகிறாராம். இப்படத்துக்காக அவர் மேக் அப் போடும் காட்சி ஒன்றும், பொதுமக்கள் நெருக்கமாக நடமாடும் வீதி ஒன்றில் அவர் குதிரையில் பயணம் செய்யும் காட்சியின் புகைப்படம் ஒன்றும் தற்போது வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. பல வட இந்தியப் பத்திரிகைகளும் கமலின் இப்புகைப்படங்களை தங்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.