அர்ஜுன் நடிப்பில் வெளியாகி செம ஹிட் கொடுத்த முதல்வன் படத்தில் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்டோர் நடிக்க மறுத்த பிறகே அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முதல்வன். 1999- ம் ஆண்டு வெளியான இந்த படம் 'அமெரிக்காவில், ஒரு நாள் மேயர்' என்ற செய்தியின் அடிப்படையில் உருவானது. சாதாரண நபருக்கு, ஒரு நாள் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தால், அவர் என்ன செய்வார்? அந்த பதவியில் இருந்து என்னென்ன செய்ய முடியும்? எத்தனை அரசியல் இடையூறுகளை, இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை, பிரமாண்டமாக சொன்னார், ஷங்கர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'குறுக்கு சிறுத்தவளே, முதல்வனே, ஷக்கலக்கா பேபி, உப்பு கருவாடு, அழகான ராட்சசியே...' பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. பின்னணி இசையிலும், ஏ.ஆர்.ரஹ்மான் ரணகளம் செய்திருந்தார். பாடல்களில் கிராபிக்ஸ் மட்டுமின்றி, கிராமத்து எழிலையும் காட்டியிருந்தனர். கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தது.

அரசியல் படத்தில், வசனங்கள் முக்கியத்துவம் பெறும். குறிப்பாக, 'ரகுவரன் - அர்ஜுன்' நேர்காணல் காட்சியில், சுஜாதாவின் வசனங்கள் கைத்தட்டலை பெற்றன. மணிவண்ணன், வடிவேலு, விஜயகுமார் போன்றோர்,நடித்திருந்த இப்படம் தெலுங்கில் ஒகே ஒக்கடு என, 'டப்பிங்' செய்யப்பட்டு வெளியானது. ஹிந்தியில், நாயக் என, 'ரீமேக்' செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது முதல்வன் குறித்து வெளியான செய்தி செம வைரலாகி வருகிறது. அதாவது முதல்வன் படத்தில் நடுப்பதற்காக முதலில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களிடம் இயக்குனர் ஷங்கர் சென்றுள்ளார். பின்னர் இவர்களின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் தான் அர்ஜுனை இயக்குனர் தேர்வு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
