’இந்தியன் 2’படத்திற்காக திடீரென சமரசக் கொடியைத் தூக்கியுள்ள ‘பிக்பாஸ்’ கமல் அதே நிறுவனத்தின் இன்னொரு பெண்டிங் படமான ‘சபாஷ் நாயுடு’ பிரச்சினைக்கும் தீர்வு காண முடிவு செய்திருக்கிறாராம்.

அத்தனை பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து கமல் இப்போது ’இந்தியன் 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்கவுள்ளது.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ’சபாஷ்நாயுடு’ என்றொரு படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதிவரை நடந்ததோடு நிற்கிறது. ‘இந்தியன் 2’ டிராப் லிஸ்டில் இந்தப்படமும் இருந்தது.

அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்த அந்தப் படத்தின் இயக்குநர் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அப்படம் அப்படியே நின்றிருக்கிறது.அந்தப்படத்துக்கு என்ன பதில்? என்று லைகா நிறுவனம் கமலிடம் கேட்டுக் கொண்டிருந்ததாம்.அதற்குப் பதிலளிக்காமல் தவிர்த்து வந்த கமல், இப்போது ஒரு தீர்வைச் சொல்லியிருக்கிறாராம்.

’சபாஷ்நாயுடு’ படத்தைத் தொடருவது சாத்தியமில்லை அதற்குப் பதிலாக இன்னொரு படம் உங்கள் நிறுவனத்துக்குச் செய்து தருகிறேன் என்று சொன்னாராம்.அதைத் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் கமல் நடிப்பில் இன்னொரு படத்தைத் தயாரிக்கப் போவதாக லைகா நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அது அநேகமாக ராஜ்கமலில் தயாரிப்பதாக இருந்த ‘தேவர் மகன்2’வாகக் கூட இருக்கலாம்.